நர்சின் இடுப்பை கிள்ளிய பிடிஓ: வெளுத்து வாங்கிய சகோதரர்…

இரத்த அழுத்த பரிசோதனைக்கு சென்ற இடத்தில் நர்சின் இடுப்பை கிள்ளிய பிடிஓவை சரமாரியாக தாக்கிய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், தகரப்புதூர் ஊராட்சி மூலப்புதூரில் கிராம சுகாதார செவிலியராக 46 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4ம் தேதி கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய பிடிஓ இளங்கோ (59) தகரப்புதூர் ஊராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்தார்.

அப்போது, அருகில் இருந்த சுகாதார நிலையத்தின் உள்ளே சென்று ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த கிராம சுகாதார செவிலியரின் இடுப்பை, பிடிஓ இளங்கோ கிள்ளியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பிடிஓவை திட்டியுள்ளார். தகவலறிந்து செவிலியரின் சகோதரரான மணிகண்டன் (42) காலை கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகுந்து பிடிஓ இளங்கோவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்ததால், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புகாரின்படி கெங்கவல்லி போலீசார் கொலை மிரட்டல், தாக்கியது, அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். இதையடுத்து மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் மனைவி கௌசல்யா ஆகியோர், கெங்கவல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தவறு செய்த பிடிஓவை கைது செய்யும்படி கோஷமிட்டனர். பிடிஓ இளங்கோ மீது பாதிக்கப்பட்ட செவிலியர் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு, இளங்கோ மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர்.