மானாமதுரையில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த ஆகாஷ் உடல், 100 நாட்களுக்குப் பின்னர் அரசு சார்பில் தகனம் செய்யப்பட்டது.
இதற்காக, மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருந்து ஆகாஷ் உடலை எடுத்துவந்தபோது, போலீஸாருக்கும் – ஆகாஷ் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸுடன் மோதியதற்காக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன் (24). அப்பகுதியைச் சேர்ந்த 2 பேரை வெட்டிய வழக்கில், போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸார் தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்ததாகக் கூறி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஆகாஷ் கடந்த மார்ச் 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் உயர் நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய போலீஸாரை கைது செய்ய வேண்டும், உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், அப்போதுதான் ஆகாஷ் உடலை பெற்றுக் கொள்வோம் என அவரது உறவினர்கள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தினர்.
இதனால், 100 நாட்களாக அவரின் உடலானது மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆகாஷ் உடலை அரசு சார்பில் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் ஆகாஷின் உடல் தகனம் செய்வதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.
அப்போது அங்கிருந்த ஆகாஷின் உறவினர்கள், உடலை வெளியே கொண்டவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுக்கம் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்த சுமார் 50 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், ஆகாஷின் உறவினர்கள் முன்னிலையில், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் ஆகாஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.

More Stories
மனைவியுடன் தகராறு; மகளை கொலை செய்து காவலாளி தற்கொலை…
தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிரை மாய்துக்கொண்ட கல்லூரி மாணவன்..!
உள்ளாட்சி தேர்தலில் போட்டி..! சற்று முன் அறிவித்த அண்ணாமலை!