பெண் தூய்மைப்பணியாளருக்கு பாலியல் தொல்லை: வீட்டிற்கு வந்து குப்பை எடுக்கச் சொல்லி மிரட்டல்…

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த 20 வயது பெண் தூய்மை பணியாளர், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். பணியின்போது 50 வயது மதிக்கத்தக்க நபர், தொடர்ந்து அந்த பெண் பணியாளரிடம் பாலியல்ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகர நல அலுவலர் மற்றும் மாநகராட்சி துப்புரவு துறையில், அந்த பெண் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்துள்ளனர்.

நேற்று காலை அந்த பெண், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த நபர் வீட்டுக்குள் வந்து குப்பையை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். அவர் மறுத்து வேறு பகுதிக்கு சென்றுள்ளார். ஆவேசமாக கூச்சலிட்ட அந்த நபர், தனது டூவீலரின் அந்த பெண் பணியாளரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு வேறொரு பகுதியில் குப்பை வாங்கி கொண்டிருந்தபோது, பணியாளரை மறித்து அவதூறாக பேசி, தகாத வார்த்தைகளால் திட்டி, ‘என் வீட்டுக்கு வர மாட்டாயா’ என கூறி கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் தனது சக பணியாளர்களிடம் கூறினார். அவர்கள் அந்த நபரின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் அவர் உரிய பதிலளிக்காமல், மற்ற பணியாளர்களையும் திட்டியுள்ளார். இதைதொடர்ந்து காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து சிங்கப்பெண் போலீசாருக்கு புகார் அளித்தோம். அவர்கள் வரவில்லை. அதேபோல் காரைக்குடி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் வரவில்லை. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் அவரை கைது செய்ய வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.