ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடியால் ஓமனின் டுக்ம் துறைமுகத்தில் சிக்கியிருந்த கப்பலில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மாலுமி நிஷாந்த் உயிர்த்தநாதன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கடந்த 5 நாட்களில் வளைகுடா பகுதியில் உயிரிழந்த இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை இவருடன் சேர்த்து 4 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஊழியர்கள் உடல் உபாதைகளாலும், உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் சூழலால், நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் அருகே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள், ஊழியர்கள் உடல் உபாதைகளாலும், உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சோக நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ஓமானின் டுக்ம் (Duqm) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த எம்.டி. செலிஸ்டியல் வணிகக் கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமி நிஷாந்த் உர்த்நாதன் உடல்நலக் குறைவால் திடீரென இறந்தார். கடந்த 5 நாட்களில் வளைகுடா பகுதியில் உயிரிழந்த இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை இவருடன் சேர்த்து 4 ஆக உயர்ந்துள்ளது.
நிஷாந்த் உர்த்நாதன் ‘எம்.டி. செலிஸ்டியல்’ (MT Celestial) என்ற எண்ணெய் டேங்கர் கப்பலில் பணியாற்றி வந்தார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிஷாந்த்திற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாததால், 11 ஆம் தேதி உயிரிழந்தார். ஜூன் 14 அன்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.
இது குறித்து தூதரக அதிகாரிகள் கூறுகையில், “நிஷாந்த் மரணம் எந்த ராணுவத் தாக்குதலாலும் ஏற்படவில்லை. திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் இறந்தார். அவரது உடல் தற்போது துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அதே கப்பலில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் கப்பல் நிறுவனத்துடன் பேசி, முறையான நடைமுறைகளை முடித்து அவரது உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து வருகிறது” என்று கூறினர்.
நிஷாந்தின் தந்தை கப்பல் நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் கூறியதாவது:- “நிஷாந்த் கடந்த 10 மாதங்களாக இந்தக் கப்பலில் பணியாற்றி வந்தார். மரண செய்தி தெரிவித்த பிறகு நிறுவனம் தொலைபேசியை அணைத்துவிட்டது. 3 நாட்களாக எந்த உதவியும் செய்யவில்லை. நிஷாந்தின் உடல்நிலை மோசமானபோது ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நிறுவனம் அதைப் பொருட்படுத்தவில்லை. உடலைப் பாதுகாப்பாக வைக்க குளிர்பதன வசதி கூட கொடுக்கவில்லை” என்றார். குடும்பத்தினர் உடலை விரைவில் மீட்டு இந்தியா கொண்டு வரவும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். நிஷாந்துக்கு ஒரு ஆண் குழந்தையும், 4 வயது மகளும் உள்ளனர்.
நிஷாந்தின் மரணத்தைத் தவிர, மேலும் 3 இந்திய மாலுமிகள் ஹார்முஸ் பகுதியில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அமெரிக்க ராணுவத்தின் நேரடித் தாக்குதலால் உயிரிழந்தனர். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதற்குப் பதிலாக அமெரிக்கக் கடற்படை அங்கு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஜூன் 10 அன்று பலாவ் நாட்டின் கொடியுடன் சென்ற ‘செட்டபெல்லோ’ என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தக் கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் ஜூன் 8 அன்று ‘மேரிவெக்ஸ்’ மற்றும் ஜூன் 11 அன்று ‘ஜல்வீர்’ ஆகிய கப்பல்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்தக் கப்பல்களில் இருந்த இந்திய ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா இந்திய கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை, இந்தியா மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் தொலைபேசியில் பேசி இந்தியாவின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
“வணிகக் கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதற்கு அமெரிக்கா அளித்த பதிலில், “ஈரானிய எண்ணெயை சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதையும், எங்கள் முற்றுகையை மீறுவதையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அனைத்துக் கப்பல்களும் எங்கள் ராணுவ உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தது.

More Stories
காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு தவெகவினர் ரகளை…
பவுன்சர்கள், ராணுவ ஜீப், ஏர் பிஸ்டலுடன் வலம் வந்த போலி பிரிகேடியர் கைது…