சுத்தம் செய்ய வேலைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு: வீட்டின் உரிமையாளர் கைது…

புதிய கட்டிடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று வேலைக்கு அழைத்து தனி அறையில் பெண் பூ வியாபாரியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் இந்து(33)(பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் டீக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை தனது பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளியில் வீட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இவரது வீட்டின் அருகே புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் சந்திரமவுலி(55), இந்து வீட்டிற்கு வந்து, எனது வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ரூ.500 தருவதாக கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட இந்து, சந்திரமவுலியுடன் புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். புதிய வீட்டில் உள்ள படுக்கை அறையை இந்துவிடம் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி இந்துவும் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் உரிமையாளரான சந்திரமவுலி, திடீரென இந்துவை பின்பக்கமாக கட்டி பிடித்து முத்தம் கொடுத்து தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கட்டயப்படுத்தியுள்ளார்.

மேலும், அதற்காக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறேன் என்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பூ வியாபாரி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். உடனே சந்திரமவுலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பூ வியாபாரி இந்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் நடந்த தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து புதிய வீட்டின் உரிமையாளரான சூளைமேடு பகுதியை சேர்ந்த சந்திரமவுலி என தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.