மாதம் ₹25,000 உதவித்தொகையுடன் அழகுக்கலை பயிற்சி – தாட்கோவின் சூப்பர் சான்ஸ்…

18 முதல் 35 வயதிற்குள் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியானவர்களாக கருதப்படுவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் தெரிவித்துள்ளார். இப்பயிற்சிகள் மூலம் இளைஞர்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18 முதல் 35 வயதிற்குள் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியானவர்களாக கருதப்படுவர். பயிற்சி காலம் 45 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் தொடர்பான தொழில்முறை திறன்கள், நடைமுறை பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் சுயதொழில் தொடங்குவதற்கும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு பயிற்சி உதவித்தொகையாக மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி நிறைவடைந்த பிறகு வேலைவாய்ப்புடன் கூடிய வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தாட்கோ அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்றும், இந்த வாய்ப்பை தகுதியான இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.