1 கிலோ தங்கம், வைர நகை திருடிய கொள்ளையன் மனைவி சிக்கினார்…

தி.நகரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிய வழக்கில் பிரபல கொள்ளையன் பிரபாகரன் மனைவியை போலீசார் தூத்துக்குடியில் கைது செய்தனர். தி.நகர் திலக் தெருவில் உள்ள பாலாஜி அடக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேஷ்வர ராவ்(64). தொழிலதிபரான இவர் தனது மனைவி சுஜாதா(60) உடன் வசித்து வருகிறார். கடந்த 1ம் தேதி வழக்கம் போல் வெங்கடேஷ்வர ராவ் தனது தொழிற்சாலைக்கு சென்றுவிட்டார். சுஜாதா வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

மதியம் வெங்கடேஷ்வர ராவ் வீடு திரும்பியபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவரது மனைவிக்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் உள்ள அலமாரி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சுஜாதா பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் கைரேகை நிபுணர்கள், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது திருட்டில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் பிரபாகரன் என தெரியவந்தது. பிரபாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தளவாய்புரம் பகுதியை சேர்ந்த சுமதி(47) என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. சுமதி எற்கனவே திருமணமானவர், கணவர் இறந்துவிட்டார், மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சுமதி சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்துள்ளார். அப்போது பிரபாகரன் நட்பு கிடைத்தது. சில நாட்களில் நட்பு காதலாக மாறிய பிரபாகரனை சுமதி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதும், இருவரும் சேர்ந்து பல இடங்களில் திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை தேடி தூத்துக்குடியில் உள்ள அவரது கிராமத்திற்கு சென்றபோது, அங்கு சுமதி மட்டும் இருந்தது தெரியவந்தது. சுமதியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, எனது கணவர் என்னிடம் சண்டை போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

எனக்கும் எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். ஆனால் போலீசாருக்கு சுமதி மீது திருட்டு வழக்கு இருப்பதால், சந்தேகமடைந்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது, தொழிலதிபர் வீட்டில் திருடிய நகைகளில் 96 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் 780 கிராம் வெள்ளி பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சுமதியை பிடித்து விசாரித்த போது, பிரபாகரன் திருடிய நகைகளில் பாதியை தன்னிடம் கொடுத்துவிட்டு சென்றதாக கூறினார்.

அதை தொடர்ந்து போலீசார் சுமதியை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், நகைகளுடன் தலைமைறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பிரபாகரனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.