குமரன் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் பிரபல திரைப்பட இயக்குநரின் 8 வயது மகனை, கஞ்சா போதையில் தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேசிய விருது பெற்ற சினிமா திரைப்பட இயக்குநரான முரளி மனோகர், நேற்று இரவு, தனது வீட்டின் அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவரது 8 வயது மகன், அங்கு விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.
அப்போது, கஞ்சா போதையில் இருந்த நபர்கள் சிலர், அவரது 8 வயது மகனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த இணை இயக்குநர் தனது மகனை மீட்டுள்ளார். அப்போது போதை ஆசாமிகள் இணை இயக்குநரையும் தாக்கும் வகையில் ஆபாசமாக பேசிவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து இணை இயக்குநர் காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகில் உள்ள குமரன் நகர் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், போலீசார் யாரும் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து இணை இயக்குநர் முரளி மனோகர், தனது எக்ஸ் தள பக்கத்தில், நடந்த சம்பவத்தை பதிவு ெசய்துள்ளார். அதில், ‘வாழ்நாளில் முதல்முறையாக நேற்றிரவு 8.20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. என் 8 வயது மகனை யாரோ இருவர் உடல் ரீதியாக துன்புறுத்த, சற்றுதள்ளி நடைபயிசியில் இருந்த நான் ஓடிப்போய் தடுத்து கேட்டேன். மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும் வேண்டாமென்றே பழுதாக்கப்பட்ட அது ஓர் இருள் சூழ்ந்த விளையாட்டு திடல்.
ஆளரவம் பெரிதாக இல்லை. உடன் எங்களை 10-12 கஞ்சாவாசிகள் சூழ்ந்து கொண்டார்கள். 15 முதல் 20 வயது இருக்கலாம் அனைவருக்கும். பதற்றத்துடன் நான் என் மகனின் தோளைத் தொட, அவன் உடல் அச்சத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி சூழ்ந்திருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தபடியே அலைபேசியில் அவசர உதவி எண் 100ஐ தொடர்பு கொண்டேன்.
ஒவ்வொரு முறையும் நெடுநேரம் காத்திருந்த பின் ஓரிரு ரிங்க் ஆகி எடுத்த பிறகு அணைக்கப்பட்டது போல் தொடர் அறுந்தது. அருகில் உள்ள குமரன் நகர் காவல் நிலைய எண்ணுக்கும் தொடர்பு கொண்டேன். உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உயிர் பாதுகாப்பில்லா சூழலில் இறுதிவரை எங்களுக்கு காவல்துறை தொடர்பு கிடைக்கவேயில்லை.
அசம்பாவிதங்களின்றி நானும், மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றப்படி நாட்டில் சட்டம் ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து குமரன் நகர் போலீசார், இணை இயக்குநர் மகனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

More Stories
அடுத்தடுத்து 7 வீடுகளில் ஏசி காப்பர் திருட்டு…
போதையில் தகராறு மதுபாட்டிலால் குத்தி திருநங்கை படுகொலை:
தமிழ் சினிமாவை மாற்றியமைத்த உண்மையான முன்னோடி இயக்குநர் பாரதிராஜா – ஆளுநர் இரங்கல்