குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பணம் மோசடி வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரை வளர்ப்பு நாயை ஏவிக் கடிக்க வைத்த தம்பதியைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் மேல நெய்யூர் சிராயன்விளை பகுதியைச் சேர்ந்த கிரேட் பிரின்ஸ் ராஜ் (31) என்ற ஜவுளி வியாபாரி, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத் தனது குடும்பச் சொத்தைப் பெற்றுத் தருமாறு தனது உறவினரான கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவர் நாகசுமன் (26) ஆகியோரை அணுகியுள்ளார்.
சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, அந்தத் தம்பதியினர் கிரேட் பிரின்ஸ் ராஜிடமிருந்து தவணை முறையில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 390 ரூபாய் மற்றும் ஒரு காரைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக மோசடிக்கு வித்திட்ட காரைப் பறிமுதல் செய்து தம்பதியரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த தம்பதியினர் தோவாளையில் உள்ள தங்களது வீட்டில் இருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகசுமனைச் சட்டப்படி கைது செய்ய முயன்றனர்.
அப்போது அவரது மனைவி கிருஷ்ணவேணி காவல் துறையினரைத் தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அச்சமயத்தில், கிருஷ்ணவேணி தங்களது வீட்டில் வளர்க்கப்படும் நாயைக் காவல் துறையினர் மீது ஏவியுள்ளார். அந்த நாய் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனைத் திடீரெனக் கொடூரமாகக் கடித்ததில், அவருக்குக் கையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
சப்-இன்ஸ்பெக்டரைக் கடிக்க வைத்ததைத் தொடர்ந்து, அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாகசுமன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர். கைதான நாகசுமன் மீது ஏற்கனவே மதுரை தெப்பக்குளம், அண்ணா நகர், நீலகிரி மாவட்ட ஊட்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஆகிய பல்வேறு காவல் எல்லைகளில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

More Stories
தனிநபர் விமர்சனம் வேண்டாம், தரமான அரசியல் பண்ணுங்க!” — எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி !எக்ஸ்தளத்தில் அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!