ஒன்றிய மற்றும் மாநில அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5.3 கோடி ரூபாய் மோசடி செய்த தந்தை,மகளை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், எம்.ஏ.மன்சூர் அகமது மற்றும் அவரது மகளான எம்பிஏ பட்டதாரி ஷம்ஷாத் பேகம் ஆகியோர் இணைந்து வேலையில்லா இளைஞர்களைக் குறிவைத்து மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போலி பயிற்சி மையங்களை அமைத்தனர்.
இவர்கள், ரயில்வே, வருமான வரித்துறை, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய மற்றும் மாநில அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய வடகர்நாடகப் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இருந்து சுமார் 5.3 கோடி ரூபாயை இவர்கள் வசூலித்துள்ளனர். மற்றவர்களை நம்ப வைப்பதற்காக பாதிக்கப்பட்ட சிலருக்கு மட்டும் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை சம்பளம் வழங்கியதோடு, போலி பணி நியமன ஆணைகளையும் வழங்கி ஏமாற்றியுள்ளனர்.
இந்த மெகா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சங்கமேஷ் ராச்சைய வஸ்திராத் என்பவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, மன்சூர் அகமது மற்றும் ஷம்ஷாத் பேகம் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்து காவலில் எடுத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கான வியூகம் வகுக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தனர்.

More Stories
சென்னையில் கொடூரம்: தூங்கிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை; மனைவி கைது!
மதுரையில் அடுத்தடுத்து அதிர்ச்சி: ஒரே நாளில் நிகழ்ந்த 3 படுகொலைகளால் மக்கள் பீதி!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !