திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த இரு பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து நகைகளை அபகரித்துக் கொண்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு வேறு இடங்களில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கின்றனர். அதிலும், மாதந்தோறும் பௌர்ணமி நாளில் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் சங்கமிக்கின்றனர். அப்படி வெளியூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் ஒரு சில இளம் ஜோடிகளை குறிவைத்து ஒரு கும்பல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளது. கடந்த 30 ஆம் தேதி வைகாசி மாத பௌர்ணமி தொடங்கிய நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் வந்துள்ளார்.
கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் இரவில் செங்கம் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் தருமபுரிக்கு திரும்பியுள்ளனர். வழியில் பெரியகோளாப்பாடி பாறை அருகே வண்டியை நிறுத்தி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்துள்ளது. அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பெண்ணையும், அவரின் ஆண் நண்பரையும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து கத்தி முனையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவரின் ஆடைகளை கலைந்து வீடியோ எடுத்த அடாவடிக் கும்பல், 2 சவரன் தங்கச் செயின், பணத்தையும் பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர். 31 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடூரத்தை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்த நிலையில், அடாவடியில் ஈடுபட்ட நபர்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். தங்களுக்கு இரண்டு சவரன் தங்கச் சங்கிலி பத்தாது என்றும், மேலும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். தவறும் பட்சத்தில் உங்களது அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். அதைக் கேட்டு அச்சம் கொண்ட பெண், தன்னிடம் இருந்த நான்காயிரம் ரூபாயை ஜி-பே மூலம் அனுப்பியுள்ளார்.
அதை வாங்கிக் கொண்ட மர்ம நபர்கள் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால், தனது கையறு நிலையை ஆண் நபரிடம் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். இதையடுத்து அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவசர எண் 100-க்கு போன் செய்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் பெண்ணை நேரில் வரவழைத்து விசாரித்துள்ளனர்.
இதனிடையே தருமபுரி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை போன்று 31-ம் தேதி அதிகாலையில் மற்றொரு பெண்ணிடம் அடாவடிக் கும்பல் அத்துமீறியுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பெண் கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலை கிராமம் அருகே சென்ற போது உடல் சோர்வானதால் நடக்க முடியாமல் போயுள்ளது. உடனே தனது நண்பரை வரவழைத்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் சென்ற போது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் இளம்பெண்ணுடன், அவரின் ஆண் நண்பரையும் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்கி வீடியோ எடுத்துள்ளனர். அந்த பெண்ணையும் பாலியல் ரீதியதாக துன்புறுத்திய வக்கிர புத்தி கொண்ட இளைஞர்கள் 2 கிராம் தங்க கம்மலை பறித்துள்ளனர். மேலும், நாளைக்கு ஜி-பே மூலம் நாங்கள் கேட்டகும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அன்று இரவே தனது தந்தையிடம் நடந்ததை கூறி அழுது புலம்பியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரே இரவில் இரு வேறு இடங்களில் இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பான புகாரால் காவல் நிலையமே கதிகலங்கிப் போயுள்ளது. உடனே, வழக்குப்பதிவு செய்த போலீசார் டிஎஸ்பி ராஜன் தலைமையில் 5 ஆய்வாளர்களை கொண்ட ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவேறு சம்பவங்களிலும் ஈடுபட்டது 11 பேர் கொண்ட ஒரே கும்பல் தான் என்பது உறுதியானது.
துரிதமாக செயல்பட்ட போலீசார் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன், பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், ஒரு சிறுவன் உட்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், தலைமறைவான 3 பேரை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வாசுதேவன் மீது, ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது அம்பலமானது. இந்த கும்பல் தனியாக வரும் இளம் ஜோடி மற்றும் காதலர்களை குறிவைத்து தொடர்ந்து அத்துமீறியுள்ளனர்.
குறிப்பாக கத்தி முனையில் இளம்பெண்களை நிர்வாணமாக்கி அதை வீடியோ எடுத்து நகை, பணம், செல்போன் போன்ற உடைமைகளை பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வழிப்பறி மற்றும் பாலியல் சீண்டலுக்காக பயன்படுத்தப்பட்ட ஆறு செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். செல்போன்களை ஆய்வு செய்ததில் அதில் உள்ள ஆதாரங்களை அவர்கள் அளித்தது தெரியவந்தது. இருந்த போதும் அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வேறு பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் உள்ளனவா? என சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இவர்கள் வேறு இளம் பெண்களை ஏமாற்றியுள்ளனரா?, அவர்களிடம் நகை, பணம் பரித்துள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டு வழக்குகளில் பெண்கள் வன்கொடுமை சட்டம், வழிப்பறி, பாலியல் தொந்தரவு, பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

More Stories
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு – தம்பதி கைது
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்ச குற்றச்சாட்டு: வழக்கு தொடர்ந்த பெண் வழக்கறிஞர் தவெகவிலிருந்து நீக்கம்
தவெக எம்எல்ஏ பேரம் பேச்சு வழக்கு: மூத்த பத்திரிகையாளரிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை