September 10, 2026

கலெக்டர் ஆபீஸ் அருகே நள்ளிரவில் வாலிபருக்கு கத்திக்குத்து…

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகளும், சமூக விரோத செயல்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே, மனைவியை கணவன் கொன்ற சம்பவமும், காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமும் பீதியடைய வைத்துள்ளது. இந்நிலையில் கோவையில் மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் இளைஞர்கள் உணவு சாப்பிட வந்துள்ளனர். அப்போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஒரு வாலிபர் கத்தியால் மற்றொருவரை கால் மற்றும் கழுத்துப்பகுதியில் குத்தி உள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். கத்தியால் குத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்து விழுந்தவரை பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதனால் பிரச்னை ஏற்பட்டது? கத்திக்குத்து சம்பவம் நடைபெற காரணம் என்ன? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may have missed