சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரை கடந்த 2021ல் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து 2025ல் மனோஜை லட்சுமணன் மகன்கள் குருபாண்டியன் (25), பாலமுருகன் (23) ஆகியோர் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் அண்ணன், தம்பி இருவரும் மதுரை நீதிமன்ற உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு சென்றுள்ளனர். காலை இருவரும் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு ஊருக்கு காரில் சென்றுள்ளனர்.
காரை சண்முகநாதன் (23) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். சண்முகபிரபு (26) உடன் சென்றுள்ளார். கார் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேலம் ரோடு ரவுண்டானா அருகில் சென்றபோது திடீரென முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் வேகத்தடை அருகில் லிப்ட் கேட்பது போல் மறித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டியபோது பின்னால் மற்றொரு காரில் மின்னல் வேகத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் குருபாண்டியன் மற்றும் காரில் சென்றவர்களை படுகொலை செய்யும் நோக்கில் வீச்சரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் கார் கண்ணாடி முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்ததுடன் காரில் இருந்த குருபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதியினர் ஓடி வந்தபோது டூவீலரை அதே இடத்தில் விட்டு விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிய குருபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் காரை திருப்பி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?