மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு மாநகராட்சி ஊழியர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசேரி காட்டுநாயக்கன்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவர் நாகர்கோவில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். குலசேகரம்புதூர் அருகே ஆதலவிளையை சேர்ந்த சுனிதா(34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜின்(14) என்ற மகன் உள்ளார். செந்தில்குமார் குடும்பத்துடன் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பூங்காநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுனிதா கோபித்துக்கொண்டு ஆதலவிளையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று செந்தில்குமார் அங்கு சென்று, மனைவியிடம் சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று மாலை மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது வீட்டில் இருந்த மகன் சஜினை வெளியே சென்று விளையாடுமாறு கூறி அனுப்பியுள்ளனர். சஜின் திரும்பி வந்தபோது தாய், தந்தை இருவரும் ெவட்டு காயத்துடன் இறந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். தகவலறிந்து ஆரல்வாய்மொழி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தில்குமார், சுனிதா இருவரும் வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் செந்தில்குமாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சுனிதாவிற்கு தெரியவே, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் தகராறு ஏற்படவே செந்தில்குமார் கத்தியால், சுனிதாவை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அதேகத்தியால் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து நேரடியாக குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி:
சுத்தம் செய்ய வேலைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு: வீட்டின் உரிமையாளர் கைது…
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு…