‘பவேரியா’ கும்பலைப் போல ஆக்ரோஷம்… நள்ளிரவில் வீட்டில் புகுந்த கும்பல்…

சிவகாசி அருகே உள்ள விஜயலட்சுமி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மருதாயி, தனது 3 தோழிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பவேரியா கும்பலைப் போல ஆக்ரோஷமாக நடந்து கொண்டவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மருதாயின் சகோதரி ஈஸ்வரியைத் தலையில் தாக்கி நிலைகுலைய வைத்துள்ளனர்.

பின்னர் மூவரையும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்கத் தோடு, வெள்ளி கொலுசு மற்றும் இரண்டு செல்போன்கள், 7ஆயிரம் பணத்தைப் பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருதாயி, சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் தனிப்படை அமைத்து கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தேடுதலில் இறங்கினர்.

கிராமப்புற பகுதி என்பதால் சிசிடிவி காட்சிகள் பெரிதாக சிக்கவில்லை. இருப்பினும் ஏரியாவிற்குள் வந்து சென்ற மர்ம நபர்களின் விவரங்களைச் சேகரித்து செல்போன் டவரின் பதிவான மொபைல் எண்களுடன் கிராஸ் செக் செய்து சிவகாசியைச் சேர்ந்த தங்கேஸ்வரன், மோகன் ஆகிய இருவரையும் முதலில் தூக்கி உள்ளனர். ஆரம்பத்தில் மே பேகுனா சாப் பாணியில் அப்பாவி போல நடித்தவர்களை அதட்டி விசாரிக்க மெகா கொள்ளையின் ஒட்டுமொத்த பின்னணியும் வெட்ட வெளிச்சமானது.

அதில் மோகன், அஜய் உள்ளிட்ட மேலும் 4 பேர் சிக்க ஒட்டுமொத்த கும்பலையும் கூண்டோடு தூக்கினர். இவர்கள் அனைவருக்கும் 25 வயது கூட நிரம்பவில்லை. நோகாமல் நோம்பி கும்பிட வேண்டும் என முடிவெடுத்து கொள்ளையடிக்க திட்டமிட்டவர்கள் தனியாக வசிக்கும் பெண்களைக் குறித்து வைத்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்துள்ளனர். இதனை அடுத்துப் பிடிபட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.