வீட்டின் உரிமையாளர் போல நடித்து, வேறு ஒருவரின் வீட்டை குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்த வழக்கில், ஐ.டி. பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் குமாரராஜா (54). குத்தகைக்கு வீடு தேடி கொண்டிருந்தார். அப்போது, சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவர் நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் மெயின் தெருவில் உள்ள வீடு ஒன்றை காண்பித்து, இந்த வீடு என்னுடையதுதான்.
ரூ.4.5 லட்சத்திற்கு குத்தகைக்கு விட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, குமாரராஜா கடந்த பிப். 13-ம் தேதி குத்தகை ஒப்பந்தம் போட்டு, சங்கரின் வீட்டில் அவரது மகள் நந்தினி (25) முன்னிலையில் ரூ.4.5 லட்சம் கொடுத்தார்.
பின்னர், சங்கர் வீட்டை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினார். அதன் பின்னர்தான், அந்த வீட்டின் உரிமையாளர் சங்கர் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, சங்கர் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து, குமாரராஜா தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சங்கரின் மகள் நந்தினியை போலீஸார் நேற்றுகைது செய்தனர். விசாரணையில் நந்தினி ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள சங்கரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

More Stories
இளம்பெண்ணை கொலை செய்து தோட்டத்திற்குள் குழி தோண்டி புதைத்த சம்பவம்:
மதுரையில் கைநிறைய சம்பாதிக்க ஒரு சூப்பர் சான்ஸ்… மத்திய அரசின் அதிரடி தொழில் பயிற்சி…
திருப்பூர் அருகே சாலை விபத்து: காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு