கார் மீது லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி…

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஷித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோர் உடன் ஒரு காரில் பொள்ளாச்சி பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள நெகமம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்தக் கோர விபத்தில் தனபால், மேனகா, சினேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கனிஷ்கா, சுர்ஜித் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கனிஷ்காவும் உயிரிழந்தார். சுர்ஜித்க்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற நெகமம் போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதிவேகமாக லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (39) என்ற லாரி ஓட்டுரை போலீசார், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.