September 10, 2026

ரயிலில் 20 கிலோ கஞ்சா ஆந்திராவில் இருந்து விழுப்புரத்துக்கு கடத்தல்:

ஆந்திராவில் இருந்து விழுப்புரத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வட மாநிலங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அவ்வப்போது விழுப்புரம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொள்ளும்போது, பிளாட்பாரங்களில் கேட்பாரற்று கிடக்கும் கஞ்சா பொட்டலங்கள் சிக்கி வருகின்றன.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விழுப்புரம் தனிப்படை போலீசார், ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய சாலையில் ரயில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தில் இருந்து வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் மூட்டை, மூட்டையாக 20 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சோழவண்டிபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மோகன்ராஜ்(34) என்பதும், இவர் ஆந்திராவிலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் மோகன்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

You may have missed