May 10, 2026

விஜய்யின் பதவியேற்பு விழாவில் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: 

விஜய்யின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமாகவும், திராவிட மண்ணின் பெருமையாகவும் விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தமிழக அரசு விழாக்களில் எப்போதும் முதலிடம் வழங்கப்படுவது மரபு. கடந்த காலங்களில் தமிழக முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த மரபை மீறி தேசிய கீதத்தை முதலில் இசைக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது, அதனைத் துணிச்சலோடு எதிர்த்து நின்றது அன்றைய திமுக அரசு. தமிழின் மாண்பையும், மாநிலத்தின் உரிமையையும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்று ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்து, தமிழ்த்தாய் வாழ்த்தின் மேன்மையை திமுக அரசு உறுதிப்படுத்தியது.

ஆனால், இன்று முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் அந்தப் பெருமைமிக்கத் தமிழ் மரபு முற்றிலுமாகத் தூக்கியெறியப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடக்கத்திலேயே இசைக்காமல், அதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதத்தை இசைக்கச் செய்து, தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சியின் இறுதிக்குத் தள்ளிப் புறக்கணிக்கப்பட்டது. தமிழக மண்ணின் அடையாளமான மாநிலப் பாடலை கடைசி இடத்திற்குத் தள்ளியது, தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தமிழார்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழைத் தூக்கிப் பிடிப்பதாக மேடைக்கு மேடை முழங்கிய விஜய், பதவியேற்ற முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு உரிய மரியாதையை வழங்கத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறிக்கொண்டு, தமிழகத்தின் தனித்துவமான கலாச்சார நடைமுறையைச் சிதைப்பதும், மாநிலப் பாடலைப் பின்னுக்குத் தள்ளுவதும் புதிய அரசின் கொள்கைப் பிழையாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த புதிய அரசின் செயல்பாடு, திராவிட மண்ணின் மரபுகளைக் காப்பதாக அமையாது என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர்.