சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி, இன்ஜினியரிங் பிரிவில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வகுப்பில் படிக்கும் நண்பர் ஆதம்பாக்கம் ஈபிகாலனி 1வது தெருவை சேர்ந்தவர் ஆதித்யா வத்சன் (20). இவர்கள் இருவரும் பெசன்ட்நகர் குறுக்கு தெரு சந்திப்பில் காரை நிறுத்திவிட்டு காரின் பின் சீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஆசாமி, காரின் அருகே வந்து டார்ச் அடித்து உள்ளே பார்த்துள்ளார்.
அப்போது, காரின் முன் கதவு திறந்து இருந்ததால் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, தன்னை சாஸ்திரிநகர் காவல்நிலைய போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர், தான் வைத்திருந்த அடையாள அட்டையை அவர்களிடம் காட்டியவாறு இருளில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என மிரட்டும் தொனியில் விசாரித்தாராம். பின்னர், அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். பணம் தர மறுத்ததால் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக கூறி அச்சுறுத்தினாராம்.
இதையடுத்து கல்லூரி மாணவி வங்கிக்கணக்கில் இருந்தும் ஜிபே மூலம் ஆதித்யா வங்கிகணக்குக்கு ₹3000அனுப்ப செய்தாராம். பின்னர், அந்த நபரே காரை ஓட்டிச்சென்று பெசன்ட்நகர் 3வது பிரதான சாலையில் ஐஓபி வங்கியின் ஏடிஎம்முக்கு அருகே நிறுத்தியுள்ளார். கல்லூரி மாணவனை ஏடிஎம்க்கு சென்று ₹8,000 எடுத்து வருமாறு கூறியுள்ளார். ஏடிஎம்மிற்கு சென்ற சமயத்தில் மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டாராம். கல்லூரி மாணவன் பணத்தை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதன்பின் அவர் சென்றுவிட்டாராம்.
இச்சம்பவம் குறித்து யாரிடமும் மாணவி தெரிவிக்கவில்லை. 30ம் தேதி தனக்கு நேர்ந்தவற்றை தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்துவருகின்றனர். இதுதொடர்பாக ஜோசப்(30) என்ற காவலரை கைது செய்து விசாரித்தனர். கொண்டித்தோப்பு காவலர் குடி யிருப்பில் அயல் பணியாக ஹை கோர்ட் வளாகத்தில் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இதே போல் எத்தனை பேரிடம் கைவரிசை காட்டியுள்ளார்?. இவர் மீது வழக்குகள் எதுவும் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்ட சடலத்தின் பாதி கால்… பொதுமக்கள் அதிர்ச்சி …
திருவிடைமருதூர் அருகே உலோகத்தாலான ஆறு சிலைகள் கண்டெடுப்பு…
வால்பாறை பகுதியில் சிறுத்தை ‘ஜாலி’ உலா: தொழிலாளர்கள் பீதி…