புனே ஹடாப்சர் பகுதியில் உள்ள மகர்பட்டா குடியிருப்பு வளாகத்தில், கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் அந்தச் சிறுமி துள்ளிக்குதித்து விளையாடச் சென்றாள். ஆனால், அந்த மதியம் அவளது வாழ்வின் கடைசி மதியமாக மாறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவள் மகிழ்ச்சியோடு ஏறி விளையாடிய அந்த இரும்புச் சறுக்கு பலகை (Slide), திடீரென அடியோடு பெயர்ந்து அந்தப் பிஞ்சின் மீதே விழுந்தது. கனமான இரும்புப் பலகை தலையில் தாக்கியதில், அந்தச் சிறுமி ரத்த வெள்ளத்தில் துடித்தாள். அவளது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இத்தனை நாளாக மருத்துவமனையில் மருத்துவர்கள் அவளைக் காப்பாற்றப் போராடினர். எனினும், தலையில் ஏற்பட்ட ஆழமான காயம் மற்றும் அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு காரணமாக, சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி இன்று உயிரிழந்தாள். தன் கண் முன்னே துள்ளித் திரிந்த குழந்தை, சடலமாகத் திரும்பியதைக் கண்டு அவளது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. இந்தச் சம்பவம் வெறும் விபத்து மட்டுமல்ல, இது ஒரு நிர்வாகத்தின் ‘அலட்சியம்’ என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். “அந்தச் சறுக்கு பலகை பழுதடைந்து இருப்பதைச் சிறுமியின் தந்தை ஏற்கனவே கவனித்துள்ளார். இது ஆபத்தானது என்று குடியிருப்புச் சங்கத் தலைவரிடமும், உறுப்பினர்களிடமும் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் அந்தப் புகாரைக் கண்டுகொள்ளவே இல்லை” என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

More Stories
இலவச மருந்துகள், இலவச மருத்துவ ஆலோசனை … பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தனியார் மருத்துவமனை அழைப்பு…
அதிகாலை 6 மணிக்கு வந்த இமெயில்…46,750 ஊழியர்கள் பணிநீக்கம்…மெட்டா, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் அதிரடி!.
ஜேஇஇ அட்வான்ஸ்டு விண்ணப்பப் பதிவு தொடக்கம்…