September 10, 2026

24 மீட்டர் சுதந்திர தேவி சிலையை தூக்கி வீசிய சூறாவளி காற்று!

பிரேசிலில் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை சூறாவளி காற்றால் நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாகாணத்தில், 2  நாட்களுக்கு முன் வெப்ப மண்டல புயல் உருவானது. அந்த புயலால் பலத்த காற்று வீசியதில் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 13 லட்சம் குடும்பங்களில் இருளில் தவித்து வருகின்றன. வெப்ப மண்டல புயலால் பிரேசிலில்  பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில், பிரேசில் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் குவைபாவில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் ஹவன் வணிக வளாகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த 24 மீட்டர் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முன்னதாக, பலத்த காற்று காரணமாக இந்த பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்படடது. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும், மின் சாதனங்களை துண்டிக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடவும் அறிவுறுத்தப்பட்டனர்.

சூறாவளி காற்றால் சேதமடைந்த சுதந்திர தேவி சிலை 1900-ம் ஆண்டுகளின் முற்பகுதியில் நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தேவி சிலை இடிந்து விழுந்த காட்சி சமூக ஊடகங்களில் காணொலியாக பரவி வருகிறது.

You may have missed