பஸ் நிலையத்தில் போதையில் இருந்த 3 டிரைவர்களுக்கு ரூ.10,000 அபராதம்: போலீசார் அதிரடி…

புதுச்சேரி பஸ் நிலையத்தில் போதையில் இருந்த 3 டிரைவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுனர்களிடம் ப்ரீத் அனலைசர் மூலம் சோதனை நடத்தியதில் 3 தனியார் பேருந்து ஓட்டுநர்கள் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பயணிகளை ஏற்றிச்செல்ல, டிரைவர் இருக்கையில் தயாராக இருந்த நிலையில் பிடிபட்டனர். இதுபற்றி உடனடியாக பேருந்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குடிபோதையில் இருந்த ஓட்டுநர்கள் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து, பேருந்துகளை இயக்க மாற்று ஓட்டுநர்கள் ஏற்பாடு செய்யப்பட்டதோடு, குடிபோதையில் இருந்த ஓட்டுநர்களுக்கு டிராபிக் போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இச்சம்பவம் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் போக்குவரத்து எஸ்பி ரச்னா சிங் கூறுகையில், தற்போது ஆட்டோ ஓட்டுநர்களையும் சோதனையிட தொடங்கி உள்ளோம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 6 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பஸ் ஓட்டுனர்கள் மீதும் தொடர் கண்காணிப்பு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்