September 10, 2026

வலுப்பெறும் புயல் சின்னம்- 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பாம்பன் பகுதியில் 5 செ.மீ., மண்டபம் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு – வடமேற்காக நகரக்கூடும் என்றும், வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர். புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைகான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை (அக்.22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

You may have missed