September 10, 2026

பாஜக தலைவர் மீது துப்பாக்கிச்சூடு: பட்டப்பகலில் பயங்கரம்!

பிஹாரில் பாஜக மூத்த தலைவர் திலீப் குமார் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள ககாரியா மாவட்டத்தில் உள்ள லாப் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப் குமார்(56). இவர் பாஜக முன்னாள் பொதுச்செயலாளராக இருந்தார். தற்போது மண்டல் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடை வீதியில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் திலீப் குமார் மார்பில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பட்டப்பகலில் பாஜக மூத்த தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு ககாரியாவில் உள்ள சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயர் சிகிச்சைக்காக உயர் மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

கங்காவ்ர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, திலீப் குமாரை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் குறித்து விசாணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து திலீப் குமார் மனைவி கூறுகையில், “அவரிடமிருந்து எனக்கு செல்போன் அழைப்பு வந்தது. யாரோ ஒருவர் தன்னைச் சுட்டதாக அவர் கூறினார்” என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கங்காவ்ர் காவல் நிலைய பொறுப்பாளர் சுந்தர் பாஸ்வான் கூறுகையில், “திலீப் குமாருக்கு, உடனடி மருத்துவ சேவையை உறுதி செய்வதே முன்னுரிமை. அவர் துப்பாக்கியால் சுடப்பட்டது குறித்து எழுத்துப்பூர்வ புகார் எதுவும் இன்னும் வரவில்லை. இருப்பினும், விசாரணையைத் தொடங்கியுள்ளோம், குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்டவரின வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இது குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மிக முக்கியமானதாக இருக்கும்” என்றார். பிஹாரில் பாஜக தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed