திமுக உடனான கூட்டணி நிலைபாட்டையும்; தொகுதி பங்கீடு பற்றியும் நாளைக்கு மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கவுள்ளது.

தொடரும் பேச்சுவார்த்தை

திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. 5 தொகுதிகளை ஏற்கும்படி திமுகவும், 6 தொகுதி கொடுத்தே ஆக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும் கூறுவதால், உடன்பாடு ஏற்படவில்லை.

பெ.சண்முகம் பேட்டி…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்து பேசினார்.

பிறகு நிருபர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது,  “கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்து இருக்கும் நிலையில், எங்களது மாநில குழு 6 தொகுதிகளுக்கு மேல் என்று வற்புறுத்த வேண்டாம், கடந்த 2021ல் போட்டியிட்ட 6 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை பெற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், ‘பெரிய அணி, அதிகமாக கட்சிகள் இருக்கிறது’ என்று கூறி, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இருக்கும் சிரமங்களை பகிர்ந்து கொண்டார்.” என்றார்.

மீண்டும் நாளை சிபிஎம் செயற்குழு கூட்டம்

கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில் மீண்டும் சிபிஎம் கட்சியின் செயற்குழு கூட்டம், நாளை காலை 10 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

மாநில குழுவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திய 5 தொகுதிகள் குறித்து விவாதித்து உரிய முடிவு எடுத்து திமுக தரப்பில் தெரிவிக்கப்படும் என பெ.சண்முகம் கூறியுள்ளார்.