September 10, 2026

கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரம்… சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி, உச்சநீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கடந்த 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது., ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐக்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. நிர்வாகி உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு வருகிற அக்டோபர் 10-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு விசாரணைக்கு வருகிறது.

You may have missed