இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் மார்ச் 28 முதல் 30 வரை நடைபெற்ற “கடல் ஓங்கிகள், கடல் பசுக்கள் மற்றும் திமிங்கல இனங்கள்” பணிமனை (National Capacity Building Workshop) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த பயிற்சி முகாம் இந்திய வன உயிர் நிறுவனம் (Wildlife Institute of India) சார்பில், நடத்தப்பட்டது. கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து வனத்துறை அதிகாரிகள், வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடல் உயிரினங்கள் பற்றி தகவல்கள்

கடல் உயிரின பாதுகாப்பில் ஈடுபடும் பல தரப்பினருக்கிடையே அறிவு பரிமாற்றம், ஒருங்கிணைப்பு மற்றும் தளத்திலான தயார் நிலையை மேம்படுத்தும் முக்கிய தளமாக இந்த நிகழ்வு அமைந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

தொழில்நுட்பம் வாயிலாக கற்போம்

இந்த பணிமனை, கடல் ஓங்கிகள், கடல் பசுக்கள் மற்றும் திமிங்கல இனங்கள் (செடேசியன்கள்) குறித்த இன அடையாளம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம், எதிர்நிலைகள் மற்றும் கரை ஒதுங்கும் சம்பவங்களுக்கு துரிதமான நடவடிக்கை எடுக்கும் முறைகள் போன்ற முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

தொழில்நுட்ப அமர்வுகள், நிபுணர் உரைகள் மற்றும் களப்பயிற்சிகள் இணைந்த நிகழ்ச்சிகள் மூலம், பங்கேற்பாளர்களுக்கு கோட்பாட்டு அறிவுடன் கூடிய நடைமுறை திறன்களும் வழங்கப்பட்டன.

பயிற்றுநர்கள்

Dr. ஜே.ஏ. ஜான்சன், திருமதி சின்மயா கானேகர், Dr. அனந்த் பாண்டே, Dr. தீபானி சுடாரியா, Dr. கே. சிவகுமார், Dr. சுவர்ணகௌரி மல்லாபூர், Dr. பாலாஜி வேதராஜன் மற்றும் Dr. சக்திவேல் உள்ளிட்ட நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

ஆய்வுகள்…

இதில் செடேசியன் உயிரியல், பாதுகாப்பு சவால்கள், கடல் உயிரின மீட்பு நடவடிக்கைகள், ஆய்வு முறைகள், உடற்கூறு ஆய்வு (necropsy), சமூக பங்கு மற்றும் கொள்கை அம்சங்கள் போன்றவை அடங்கும்.
மேலும், நடைமுறை பயிற்சியாக ஓலைக்குடா, தனுஷ்கோடி மற்றும் குருசடைத் தீவு பகுதிகளுக்கு பங்கேற்பாளர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.

மேலும், கடல் ஓங்கிகள், கடல் பசுக்கள் மற்றும் திமிங்கல இனங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.