September 10, 2026

இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்ட ரஜினிகாந்த்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். நடிகர் கமல்ஹாசன் இன்று காலை ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தகவல் இமயமலையில் ஆன்மிக சுற்றுப் பயணம் செய்து வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்த நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் விரைவில் பூரண நலம் பெற வேண்டிக்கொள்வதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

You may have missed