September 10, 2026

அப்பளம் தயாரிப்பு செலவு அதிகரிப்பு : நெருக்கடியில் சிறு தொழிலாளர்கள் – நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு..? 

அப்பளம் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது சிறு மற்றும் குறுந்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது என தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் திருமுருகன் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தின் பாரம்பரிய தொழிலான அப்பளம் மற்றும் வடகம் தயாரிப்புத் தொழில், மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வால் வாழ்வாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், இதில் அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

கடும் விலையேற்றத்தில் மூலப்பொருட்கள்

மேலும் அவர், “அப்பளம் தயாரிப்பின் முதன்மை மூலப்பொருளாக உள்ள உளுந்தம் பருப்பு விலை சமீப காலமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு குவின்டாலுக்கு சுமார் ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோவுக்கு ரூ.30 வரை கூடுதல் விலையில் விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பளம் தயாரிப்பு செலவு பெரிதும் உயர்ந்துள்ளது.

மேலும் அப்பளம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பொருட்களின் விலையும் சுமார் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. பாலித்தீன் பைகள், பசை, பெட்டிக் கட்டும் பெல்ட், செல்லோ டேப், பேக்கிங் பாலித்தீன் பைகள், டை போன்ற துணை பொருட்கள் மட்டுமின்றி தொழிலாளர் கூலியும் ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளதால் அப்பளம் தயாரிப்பு கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது” என்றார்.

நெருக்கடியில் சிறு தொழிலாளர்கள்

அதனை தொடர்ந்து, “இந்த திடீர் விலை உயர்வு இயற்கையான சந்தை மாற்றத்தினாலா அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் அப்பளத்தின் விலையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்களின் வாங்கும் திறனை கருத்தில் கொண்டு பல சிறு தொழிலாளர்கள் விலையை உயர்த்த முடியாமல் திணறி வருகின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை கூடுதல் செலவு ஏற்பட்டால் பொதுமக்கள் அப்பளம் வாங்குவது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியும் எழுகிறது” என்று கூறியுள்ளார்.

குடும்பங்கள் பாதிப்பு

இந்த கடுமையான சூழ்நிலையால் தமிழ்நாட்டில் இயங்கி வந்த பல சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் தற்போது பாதியாகவே செயல்பட்டு வருகின்றன. பல நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளதும் மிகுந்த வேதனையளிக்கும் விஷயமாகும். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு அப்பளம் மற்றும் அதனை சார்ந்த சிறு தொழில்களை பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

திமுக அரசுக்கு வலியுறுத்தல்

மேலும் அப்பளத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தி, சிறு தொழில்களுக்கு தேவையான சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும்.

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் அப்பளத் தொழிலை காப்பாற்ற போர்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு வலியுறுத்துகிறது என்று திருமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You may have missed