September 10, 2026

இன்று கார்த்திகை 1…மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளளனர்.

கேரளாவில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் 1-ம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதமிருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாதம் இன்று (நவம்பர் 17) பிறந்ததையொட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலை துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். தங்களது குருசாமிகள் மூலம் அருகில் உள்ள கோயில்களில் இன்று அதிகாலை சரணகோஷம் முழங்க அவர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

You may have missed