திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன் நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக் கொள்கிறார். திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நடந்து முடிந்த கேரள மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி மட்டும் 63 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன் மூலம் கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது.
வெற்றிக்குப் பிறகு முதல்-மந்திரி பதவியை ஏற்பதில் காங்கிரசுக்குள் நிலவி வந்த 10 நாள் இழுபறிக்கு முடிவு காணப்பட்டு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை புதிய முதல்-மந்திரியாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, வி.டி.சதீசன் கவர்னர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்து, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் அழைப்பை ஏற்று நாளை பதவிப் பிரமாணம் நடைபெறுகிறது.
பிரமாண்ட ஏற்பாடுகள்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வதால், பதவி ஏற்பு விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, இமாசலப் பிரதேச முதல்-மந்திரிகளான சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் என இந்த விழாவில் சுமார் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், விழா நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

More Stories
நீட் மறு தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறால் தேர்வர்கள் தவிப்பு…
தனியார் ரிசார்ட்டில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்:
தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள் மீது விரைவு ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு…