நீட் 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்திய தேசிய மாணவர் சங்கம் போராட்டம்…

2026 தேர்வு முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள சாஸ்திரி பவன் முன்பாக இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். “கணிப்பு வினாத்தாள்” என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் பரவிய 400 வினாக்ளில் 120 கேள்விகள் வந்ததுதான் சந்தேகத்தை அரசுக்கு உறுதி செய்தது.

22 லட்சம் மாணவர்கள் எழுதிய 2026-ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு, வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு குறித்த உண்மைகள், வாட்ஸ்அப்பில் பலமுறை பகிரப்பட்ட “கணிப்பு வினாத்தாள்” என்ற ஒரு சிறிய குறிப்பின் மூலமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்துள்ளதோடு, மறுதேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது

இந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக தேசிய தேர்வு முகமை உறுதி அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநில காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர் இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தொடக்ககட்ட விசாரணையின்படி, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்த ராகேஷ் மண்டவாரியா என்பவர் இந்த ஆவணத்தை முதலில் பகிர்ந்துள்ளார். பின்னர் இது கேரளாவில் பயிலும் ஒரு மருத்துவ மாணவர் மூலமாகப் பரவி, அங்கிருந்து பல்வேறு மாணவர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்கள் கைக்குக் கிடைத்துள்ளது.

குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் சீகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி உரிமையாளர் மூலம் இது பலருக்குப் பரவியுள்ளது. இந்த விடுதி உரிமையாளரே முதலில் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தாலும், தற்போது அவரும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இந்த வினாத்தாள் கசிவு மிகவும் பரவலாகிவிட்டதை உணர்ந்தே அவர் காவல்துறையை அணுகியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ராஜஸ்தான் காவல்துறை கூடுதல் டிஜிபி விஷால் பன்சால் கூறுகையில், அந்த கணிப்பு வினாத்தாளில் சுமார் 400 கேள்விகள் இருந்ததாகவும், அதில் 120 கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்ட அசல் கேள்விகளுடன் ஒத்துப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வு நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, ஒருவேளை ஒரு மாதத்திற்கு முன்பே கூட இந்த வினாத்தாள் மாணவர்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது வரை மாணவர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்கள் என 24-க்கும் மேற்பட்டவர்கள் பிடித்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தை ராஜஸ்தான் பாஜக அரசு கடந்த இரண்டு வாரங்களாக மறைக்க முயற்சி செய்ததாக முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நீட் 2026 தேர்வு முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள சாஸ்திரி பவன் முன்பாக இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கும் தற்போதைய தேர்வு முறைக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்கள் “பிரதமர் சமரசம் செய்துவிட்டார், வினாத்தாளும் சமரசம் ஆகிவிட்டது”, “வினாத்தாள் கசிவு, மோடி அரசு பலவீனம்”, மற்றும் “மருத்துவர் பட்டம் விற்பனைக்கு உள்ளது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

சாஸ்திரி பவன் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடுப்புகளுக்கு இடையே, “மாணவர்கள் மீதான அக்கிரமத்தை நிறுத்துங்கள்” போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இதற்கிடையில், தேசிய தேர்வு முகமை தரப்பில் பேசுகையில், தேர்வு முறையின் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்திய அரசின் ஒப்புதலுடன் இந்த ரத்து முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்வு ரத்து செய்யப்பட்டதே நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகளும், கடுமையான குளறுபடிகளும் நடந்திருப்பதற்கான ஆதாரம் என்று இந்திய தேசிய மாணவர் சங்கம் கூறியுள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மத்திய அரசு தொடர்ந்து தவறி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்துப் பேசிய இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் வினோத் ஜாக்கர், “நீட் தேர்வை ரத்து செய்திருப்பது மாணவர் சக்திக்கும், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தேர்வர்களின் குரலுக்கும் கிடைத்த வெற்றி; இந்த விவகாரத்தை முதன்முதலில் கையில் எடுத்து மாணவர்களுக்காக நீதி கேட்ட அமைப்புகளில் இந்திய தேசிய மாணவர் சங்கமும் ஒன்று” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “தேர்வு முறை நியாயமாக இருந்திருந்தால், இன்று தேர்வை ரத்து செய்துவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்காது. இது கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமையின் தோல்வியை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது” என்று மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.