அரசு அலுவலகங்களில் மட்டும் கைவரிசை; கணினி, பிரிண்டர்களை திருடி விற்று ஆடம்பரமாக வாழ்ந்த மாணவன்…

அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகள், பிரிண்டர்களை திருடி ஆன்லைனில் விற்று ஆடம்பரமாக வாழ்ந்த இன்ஜினியரிங் மாணவனை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர்.புரத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் மடிக்கணினிகள் திருட்டுபோனதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று எஸ்.ஆர்.புரம் காவல் நிலைய போலீசார் மத்திய கிராஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வவழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பைக்கில் நடத்திய சோதனையில் மடிக்கணினிகள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் பிடிபட்டவர், கன்னியாகபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்பாபு (20), இன்ஜினியரிங் மாணவன் என்பது தெரியவந்தது. இவர் அரசு அலுவலகங்களில் கணினிகள், பிரிண்டர்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து 30 பிரிண்டர்கள், கணினிகள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மாணவர் மகேஷ்பாபு சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் திருடி வந்துள்ளார். திருடிய பொருட்களை விற்று சம்பாதித்த பணத்தை ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவழித்துள்ளார். திருடப்பட்ட பிரிண்டர்கள் மற்றும் மடிக்கணினிகளை ஓஎல்எக்ஸ் செயலியில் பழைய பொருட்கள் என பதிவேற்றம் செய்து விற்றுள்ளார்.சித்தூர், திருப்பதி, அன்னமையா ஆகிய 3 மாவட்டங்களில் 18 அரசு அலுவலகங்களில் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.