தூத்துக்குடி அருகே நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற மற்றொருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் கணேசன்(65). இவர், திரைப்பட நடிகை தீபாவின் தந்தை ஆவார். நேற்று மாலை முத்தையாபுரம் பல்க் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து புலவர் கணேசனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அருகில் இருந்த முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் தடுக்க முயன்றார். அவருக்கு கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகையின் தந்தை புலவர் கணேசனுக்கு ஏதேனும் முன்விரோதம் அல்லது சொத்துப் பிரச்சினைகள் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் தப்பியோடிய குற்றவாளிகளை முத்தையாபுரம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

More Stories
டாஸ்மாக் கடைகளில் 54 புதிய பிராண்ட் மது வகைகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு
சிவகங்கை நீர்நிலைகளில் இலவச வண்டல் – களிமண் பெற விண்ணப்பிக்கலாம்!
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்த சென்னை பக்தர் மரணம்: அரை மணி நேரம் நடை அடைப்பு