September 10, 2026

தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கண்டு, மின்தடை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் பரவலான புகார்கள் எழுந்துள்ளன. கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவில் சென்னை வில்லிவாக்கம், திருவொற்றியூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான மின்தடை காரணமாக, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் இதே போன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. சுட்டெரிக்கும் இக்கடுமையான கோடைக்காலத்தில், போதிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருவதையும், பாதிக்கப்படுவதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இந்தத் தொடர் மின்வெட்டுப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் இனி மின்தடை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.”

இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

You may have missed