தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” எனத் தனது கடைசி நிமிட வீடியோவைப் பதிவு செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த கடுமையான தோல்விக்குப் பிறகு, அக்கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்ட நிலையில், மீண்டும் எஸ்பி வேலுமணி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, இணைந்துகொண்டார். எனினும், 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு தாவியுள்ளனர்.
சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சேரவில்லை. அவர்கள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. ஏற்கனவே, அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில் அவர்கள் தனிக் கட்சியாக செயல்படுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.
பல அதிமுக முன்னாள் சீனியர்கள் தற்போது தவெகவில் இணைந்து அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் உள்ளனர். இந்நிலையில், அதிமுகவின் மற்றொரு பிளவு கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளராக இருந்த பூக்கடை மகேந்திரன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” எனத் தனது கடைசி நிமிட வீடியோவைப் பதிவு செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பூக்கடை மகேந்திரன் வெளியிட்ட கடைசி வீடியோவில், “கட்சியில் சில நாட்களாக நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது என்னைப் போன்ற எளிய தொண்டர்கள் மன வேதனையில் இருக்கிறோம். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். என்னுடைய இறப்புக்குப் பிறகாவது கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்றிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என் இறப்புக்குப் பிறகாவது அதிமுக தொண்டர்கள் ஒன்றுசேர வேண்டும். எனது கடைசி ஆசை, எனது உடலுக்கு நான் வணங்கும் மனித தெய்வம் எடப்பாடியார் மாலை அணிவிக்க வேண்டும்.
மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தால் அதிமுகவின் எளிய தொண்டனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர், கட்சியின் ஒன்றிணைவை வலியுறுத்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது அதிமுகவினர் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பனந்தாளுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

More Stories
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்!
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது…
கஞ்சா, போதை பொருள் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தவெக அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை: