ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்…..கார், ஆம்னி பஸ் மோதல்.. 3 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று காலையில் ஆம்னி பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டையில் இருந்து பயணிகளுடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே சானமாவு பகுதியில் சென்றபோது ஆம்னி பஸ்சும் எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்து அபயக்குரல் எழுப்பினர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் கார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். சதீஷ்குமார் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.