திருப்பூர்: திருப்பூர் மாநகரின் முக்கியப் பகுதியான காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காவல் நிலைய வாசலில் குப்பை மேடு

திருப்பூர் காட்டன் மார்க்கெட் மைய வளாகத்தில் திருப்பூர் தெற்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு புகார்கள் மற்றும் விசாரணைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே குப்பைகள் அகற்றப்படாமல் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கின்றன.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கண்டனம்
இது குறித்து தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்:
”திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகம் மற்றும் தெற்கு காவல் நிலையப் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புகார் அளிக்க வரும் மக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை நீடிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
கோரிக்கை
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் குப்பை மேலாண்மைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகும் என மக்கள் எச்சரிக்கின்றனர்.




