விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், “நடிகை நயன்தாரா வேண்டும் என்று கனவை சொல்கிறேன், முதல்வர் நிறைவேற்றி கொடுப்பாரா? என்று அருவருக்கத்தக்க வகையில் நடிகையை ஆபாசமாக அவர் பேசியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆன சிபி சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து பேசியதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எங்கள் சகோதரி நயன்தாராவை

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

தேர்தல் களத்தில் கருத்துரீதியாக அதுவும் கொள்கைரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டி இருக்கிறது. ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட்கப்படாமல் பேசியதற்கு..!

மேலும், “மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது. விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது, தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது, எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்..?

இது பெண்களின் யுகம் அவர்கள் இல்லாத துறையே இல்லை வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும்.

அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம், இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்று காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம்.. தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்..” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.