​மதுரை – திருமங்கலம்:-

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திரளி பெரிய கண்மாயில், விதிகளுக்குப் புறம்பாக ராட்சதப் பள்ளங்கள் தோண்டி மண் எடுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார், மாவட்ட நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல் மௌனம் காப்பது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

​விதிமுறை மீறல் பின்னணி:

திருமங்கலம் – தென்காசி நான்கு வழிச் சாலை பணிக்காக, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் திரளி பெரிய கண்மாயில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய பணிகளுக்கு 1 மீட்டர் (3.2 அடி) ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், அந்த அனுமதியைத் துஷ்பிரயோகம் செய்து, சுமார் 4 மீட்டர் ஆழம் வரை மண் சுரண்டப்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​RTI அம்பலப்படுத்திய பிறகும் அதிகாரிகள் அலட்சியம்:

இது தொடர்பாக, கடந்த ஜனவரி 22, 2026 அன்று மதுரை மாவட்ட கனிமவளத்துறைக்கு GPS புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கனிமவளத்துறை அளித்துள்ள பதில் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

GPS புகைப்படங்கள் – ஆதாரம்

​கள ஆய்வு இல்லை:

புகார் அளிக்கப்பட்டு ஒரு மாதமாகியும், இதுவரை அந்த இடத்தில் எவ்வித கள ஆய்வும் நடத்தப்படவில்லை எனத் துறை ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

GPS புகைப்படங்கள் – ஆதாரம்

​பழைய தகவல்களைக் கூறி “மழுப்பல்”

2026-ல் அளிக்கப்பட்ட புகாருக்கு, 2016-ஆம் ஆண்டு தொடர்பான பழைய கோப்புகளைக் காட்டி அதிகாரிகள் மழுப்பலான பதில்களை அளித்துள்ளனர்.

​தகவல் மறுப்பு ஏன்?

ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி விவரங்களைக் கேட்டதற்கு, அது “மூன்றாம் நபர் தகவல்” எனக் கூறிப் பொது நலனைப் புறக்கணித்துத் தகவல்கள் மறுக்கப்பட்டுள்ளன.

GPS புகைப்படங்கள் – ஆதாரம்

​விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி:

நீர்நிலையின் ஆழம் அனுமதிக்கப்பட்ட அளவை விடத் தன்னிச்சையாக அதிகரிக்கப்படுவதால், கண்மாயின் நீர்த் தேக்க கட்டமைப்பு சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. இது நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதிப்பதோடு, எதிர்காலத்தில் விவசாயப் பாசனத்திற்குப் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கும் எனத் திரளி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

​ஜியோ நியூஸ் தமிழ் (Jio News Tamil) கள ஆய்வு:

இந்த விதிமுறை மீறல்கள் குறித்து, கண்மாயில் மண் அள்னி செல்லும் லாரிகள்  “ஜியோ நியூஸ் தமிழ்” யூடியூப் தளம் வீடியோ ஆதாரங்களாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
​பொதுமக்கள் மற்றும் சமூக

ஆர்வலர்களின் கேள்வி..?

“புகார் அளித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தத் தயங்குவது ஏன்? ஒப்பந்த நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்படுகிறார்களா?” என்ற கேள்விகள் வலுத்துள்ளன. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஒரு சிறப்புக் குழுவை அமைத்துக் கண்மாயைத் தணிக்கை செய்ய வேண்டும். விதிமீறல் நிரூபணமானால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து, அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் அல்லது அரசு அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்கும் பட்சத்தில், அதையும் செய்தியாக வெளியிட ஜியோ நியூஸ் தமிழ் தயாராக உள்ளது.