திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியின் 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து, தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மூதாட்டியின் சங்கிலி பறிப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. 75 வயதாகும் மூதாட்டியான இவர், இரவில் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, ராகவேந்திரபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், மூதாட்டியான விஜயலட்சுமி அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி விஜயலட்சுமி, கூச்சலிட்டு அக்கம்- பக்கத்தினர் வருவதற்கு முன்பே அந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து, விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் ஸ்ரீரங்கத்தில் இரவு நேரத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதாகவும் போலீசார் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.