பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம், எங்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்கிறார்கள். ஆனால் இன்னும் முதல்வர் எங்களை நேரில் பார்க்கவில்லை எங்கள் கோரிக்கைகள் குறித்த அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ன் படி, 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்ற போராட்டம் இன்று வரை தொடர்கிறது.

ஆனால் தொடர்ந்து போராடிவரும் பகுதிநேர ஆசிரியர்களை இன்னும் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திக்கவில்லை என்றும் எங்களின் கோரிக்கைகளை அவர் கேட்பதாக தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி 181-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் வரை போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?:

திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு இடங்களில் பகுதிநேர ஆசிரியர்களைக் குறிப்பிட்டிருந்தது.

வாக்குறுதி 181: பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

வாக்குறுதி 153: 10-ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் (தற்போது பகுதிநேர ஆசிரியர்கள் 15 ஆண்டுகள் வேலை செய்கின்றார்கள்).

வாக்குறுதி 377: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை பகுதிகளில் அளித்த வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும்.

ஆனால், ஆட்சி முடியும் தருவாயில் உள்ள நிலையிலும், இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தினமும் பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து மண்டபத்தில் அடைப்பதன் மூலம் போராட்டத்தை நசுக்கிவிடலாம் என்று முதல்வர் நினைக்க வேண்டாம். இது கொள்கை முடிவு எடுக்க வேண்டிய நேரம். எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இன்றி, ஏற்கனவே அளித்த வாக்குறுதியை அரசாணையாக வெளியிட்டாலே போதும்.

பணி நிரந்தரம் என்ற ஒற்றை அறிவிப்பு மட்டுமே 12,000 குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கும் என்று, பகுதி நீ தான் ஆசிரியர்கள் அண்ணன் தரப்பில் கோரிக்கையாக கூறப்பட்டுள்ளது.