தமிழகத்தில் 4 லட்சம் ஆசிரியர்கைள காப்பாற்ற 2026ம் ஆண்டுக்கான சிறப்பு தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக 2026-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை வெளியிடவில்லை. ஆசிரியர் பணிக்கு செல்லத் துடிக்கும், ஆசிரியர் பணியில் சேர்ந்து அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும்.
“குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்பதாலும் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.
இவ்வளவு அதிக தேவைகள் இருந்தும் கூட, 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாதது அதன் அலட்சியத்தையும், பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும்,நம்பிய ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டு விடாமல், எளிய பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் கூட சிறப்புத் தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் “2026 – இந்தாண்டுக்கான ‘டெட்’ ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான அட்டவணையை உடனே அரசு சார்பில் வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.






