திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற அரசு நிலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 38 புதிய நகரப் பேருந்துகள் மற்றும் 23 புதிய புறநகர் பேருந்துகள், என மொத்தம் 61 புதிய பேருந்துகளின் சேவைகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதல்வர் அறிவித்த புதிய 8 திட்டங்கள்
மாநகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், இடும்பன்குளம் மற்றும் சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், புதிய நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும்.
கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா உருவாக்கப்படும்.

ஒட்டன்சத்திரத்தில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் என்றும், ஏற்றுமதியாகும் கண்வலி கிழங்குக்கு நியாயமான மற்றும் நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த விழாவில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






