சென்னை விருகம்பாக்கம் பள்ளியில் மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணனின் நினைவேந்தல் படத்திறப்பு விழா நடைபெற்றது.
இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏ.வி.எம்.சரவணனின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கலைஞரும் ஏவிஎம் நிறுவனமும்
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கலைஞருக்கும் ஏவிஎம் நிறுவனத்திற்குமான தொடர்பு நீண்ட நெடியது; ஏவிஎம்மில் தொழிலாளர் போராட்டம் நடந்தபோது அதை தீர்த்து வைத்தவர் கலைஞர்தான்; ஏவிஎம் நிறுவனத்தின் பொன்விழா நடந்தபோது அதில் பங்கேற்று கேடயம் வழங்கினார் கலைஞர்” என்று பழைய மலரும் நினைவுகளை அவர் பகிர்ந்தார்.
ஏவிஎம் நிறுவனத்தைக் குறிப்பிடாமல்…
மேலும், “ஏவிஎம் நிறுவனத்தைக் குறிப்பிடாமல் தமிழ் சினிமாவைப் பற்றி பேசவே முடியாது; மெய்யப்ப செட்டியார் மறைவுக்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை சரவணன் கட்டிக் காத்திருக்கிறார். காலத்திற்கேற்ப மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் சரவணன் ஆர்வம் கொண்டிருந்தார் என்று மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்களின் பெருமைகளை பற்றி பேசினார்.

ஏவிஎம் பள்ளியில் படித்த மாணவன்
முதல்வரை தொடர்ந்து பேசிய நடிகர் கமல், ”சினிமாவில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தவர் ஏ.வி.எம்.சரவணன். அவர் சகலகலா வல்லவர் தான். எனக்கு 65 ஆண்டுகால நட்பு உள்ளது. சினிமாவை புரிந்து கொண்டது ஏவிஎம் ஸ்டுடியோவில் தான்.
இங்கு பயின்றது எனக்கு பெருமை. குழந்தையாக சென்ற என்னை வளர்த்துவிட்டது ஏவிஎம் நிறுவனம் தான். ஏவிஎம் நிறுவனத்தில் படித்த விஷயங்கள் தான் இன்றும் என்னை வழி நடத்துகிறது. ஏவிஎம் பள்ளியில் படித்து வெளியே வந்தவர்கள் அனைவரும் பெரிய நபராக உயர்ந்துள்ளனர்” என்று நடிகர் கமல் தெரிவித்தார்.






