திருநெல்வேலி மாவட்டத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள், தண்டனை பெற்றவர்கள் என முழு தகவல்களை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

கொலை குற்றங்கள்

இதில், “2025-ம் ஆண்டில் 27 கொலை வழக்குகளில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 96 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் வாங்கி தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்று அதிகமான வழக்குகளில் தண்டணை பெற்றுத் தரப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், 14 கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. அதே போல் 1 கூட்டுக் கொள்ளை வழக்கிலும், 2 கொள்ளை வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது”

குண்டர் தடுப்பு காவல் சட்டம்:

2025-ம் ஆண்டு மொத்தம் 159 சமூக விரோதிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், 107 நபர்கள் போக்கிரிகள் ஆவார்கள். 19 நபர்கள் கஞ்சா வழக்கிலும், 7 பேர் கொள்ளை, திருட்டு வழக்கிலும், 26 நபர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள்.

போக்சோ வழக்குகள்:

2025-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 289 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டில் 28 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 29 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட நான்கு நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

கொலை வழக்குகள்:

2025-ம் ஆண்டில் 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கானது சென்ற ஆண்டில் பதிவான 35 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 20 விழுக்காடு குறைவானதாகும். இந்த ஆண்டில் நடந்த கொலை வழக்குகளில் சம்பந்தபட்ட 114 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 21 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.