சிவகாசியில் சாலையோரக் காய்கறி வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.500 கள்ள நோட்டு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நீராவிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தலட்சுமி. இவர் சிவகாசி மாநகராட்சிப் பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். இவரிடம் சிவகாசியிலிருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையிலுள்ள சித்துராஜபுரம் பி.எஸ்.ஆர் நகரில் வசிக்கும் நந்தினி என்பவர் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து 350 ரூபாய்க்குக் காய்கறி வகைகளை வாங்கியுள்ளார். காய்கறிகளைப் பெற்றுக் கொண்ட நந்தினி மீதித் தொகையான ரூபாய் 150-ஐ வாங்கிச் சென்று விட்டார்.
ஏமாந்த பெண் காய்கறி வியாபாரி
காய்கறிகள் வாங்கிய நந்தினி தந்துவிட்டுச் சென்ற 500 ரூபாய் நோட்டின் மீது சந்தேகமடைந்த காய்கறி வியாபாரி ஆனந்தலட்சுமி, அந்த ரூபாய் நோட்டை அருகில் கடை வைத்துள்ளவர்களிடம் கொடுத்து சரிபார்க்கக் கூறியுள்ளார்.
பிடிப்பட்டுக் கொண்ட நத்தினி
அப்போது நந்தினி கொடுத்துவிட்டுச் சென்ற அந்த 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு எனத் தெரியவந்தது.
இதையடுத்து, மீண்டும் நந்தினி இன்னொரு 500- ரூபாய் நோட்டைக் கொண்டு வந்து ஆனந்தலட்சுமியிடம் காய்கறி வாங்க வந்துள்ளார். அப்போது ஆனந்த லட்சுமி அருகிலுள்ளவர்களின் உதவியோடு நந்தினியைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இருவர் கைது
இச்சம்பவம் குறித்து, சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தினியை கைது செய்ததுடன் அப்பெண்ணின் வீட்டிலிருந்து “40-க்கும் மேற்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல்” செய்தனர். நந்தினிக்கு கள்ள நோட்டு விவகாரத்தில் உதவிய ரவிக்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து, இருவரையும் சிறையில் அடைந்தனர்.
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது யார்?
மேலும், 500- ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சகத் தொழிலில் பிரபலமடைந்துள்ள சிவகாசியிலேயே அச்சடிக்கப்பட்டதா? அச்சகத்தில் அச்சடிக்கப்படாமல் கணினி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரங்கள் மூலமாக பிரிண்ட் எடுக்கப்பட்டதா? அல்லது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து 500 -ரூபாய் கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டு தொழில்கள் நிறைந்துள்ள நகரமான சிவகாசி வட்டாரத்தில் புழக்கத்தில் விட கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






