திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணியில் விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்ய இன்று (டிசம்பர் 31 ) வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். எதிர்காலத்தில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கருப்பொருளின் கீழ், இன்னும் சிறப்பான கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும். நமது நாட்டின் இரு பகுதிகளுக்கு இடையே இத்தகைய பிரம்மாண்டமான கலாச்சாரப் பாலத்தை உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் இப்போது தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இது தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரையாகும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது என்பது மக்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயம்.

அத்தகைய ஆன்மீக மரபுகளைக் கடைப்பிடிக்க யாருக்கும் உரிமை உண்டு. இத்தகைய கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணியில் விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசியல் நோக்குடன் கையாள்கிறார்கள்.சிவபெருமான் இவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார்.