‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஊரோரம் புளியமரம்’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 75.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த கிராமிய பாடகி லட்சுமி அம்மாள். நாட்டுப்புற கலைஞரான இவர் துவக்கத்தில் பரவை முனியம்மாளுடன் இணைந்து தென் மாவட்டங்களில் நடைபெற்ற கச்சேரிகளில் பாடி வந்தார். “தூள்’ திரைப்படத்தின் மூலம் பரவை முனியம்மா திரைத்துறையில் நுழையவும், லட்சுமி அம்மாள் கோயில் விழாக்களில் பாடி வந்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் லட்சுமி அம்மாள் திரைத்துறையில் அறிமுகமானார். இதன் பின் ‘மாட்டுத்தாவணி’, ‘தெனாவெட்டு’ உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால், இவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால் முன்பு போல பாட முடியாமல் தவித்து வந்தார். நலிந்த நிலையில் வாடும் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருந்தார். இந்த நிலையில், லட்சுமி அம்மாள் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மறைவுக்குத் திரையுலகினரும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்





